கடவுளின் நாவிலிருந்து அவர்கள் எழுதிச் சென்றார்கள்
வதை சூழ் ஆத்மாவின்
கிழிபடும் இதழ்களுக்கிடையில்
சிக்கிக் கிடந்தது வார்த்தை
துக்கித்த இருளைப்
பிரவகிக்கும் நோக்குடன்
அதன் விழிகளில் துலங்கும்
கூர்மை
என்னை வேட்டையாடத்
தயாராகவே இருந்தது.
வன்மம் குடிகொள்ள
குதறும் வார்த்தைகளை
கூரிய அம்பாக்கி
சமருக்குத் தயாராகும் கணத்தில்
கடவுளின் நாவிலிருந்து
அவர்கள் எழுதிச் சென்றார்கள்
நான் ஏலவே கொல்லப்பட்டவன்
என்பதை
Posted in | 0 comments
தொலைவில் ஒரு வீடு
‘சில கவிஞர்கள் இருக்கிறார்கள் மற்றவர்களுக்குப் புரியக்கூடாது என்பது போலவே எழுது கிறார்கள், சிலவேளை அதனைத் தமது மேதமை என்றும் அவர்கள் கருதுகிறார்கள்’ என்ற பொருள்பட பல நண்பர்கள், பல தடைவை, கவிதையுட்படப் பல கலைப் படைப்புக்கள் பற்றியும் கூறக் கேட்டிருக்கிறோம்.
ஒரு புறம் அருந்தலான சில வெளிப்பாடுகள் ஒருவேளை மேற்படி குற்றச்சாட்டிற்குப் பொருத்தப்பாடுடையதாக இருக்கலாம். ஆனால் மறுபுறம் எந்தவிதத் தயக்கமுமின்றி பெரும் பாலான படைப்புக்கள் மீதுங் கூட இந்தவிதமான குற்றச்சாட்டுக்கள் மிக வேகமாக வீசி எறியப் படுவதை எமது கலை - பண்பாட்டுச் சூழலில் முடிவின்றிப் பார்க்க முடிகின்றது. இதனைச் ‘சாதாரணமானவர்கள்’ மட்டுமின்றி ‘பேர்பெற்ற’ படைப்பாளிகள் - புத்திஜீவிகள் எனப்படு வோர் - இலக்கியம் கற்பிப்போர் எனப் பலரும் செய்கிறார்கள்.
மேற்படி குற்றச்சாட்டுக்களின் நியாயந்தான் என்ன? கவிதையின் புரிபடாத் தன்மை என் பது முழுக்க முழுக்க குறித்த படைப்பும் படைப்பாளியும் சார்ந்த பிரச்சினைதானா? அல்லது இந்தப் பிரச்சினை படைப்புகளை நுகர்வோர் இரசிகரோடு சம்பந்தப்பட்டுள்ளதா?
பொதுவாக எழுதப்படுவன/ படைக்கப்படுகின்ற யாவும் யாவரும் புரிந்து கொள்ளத்தக்க வாறு - மபாமரருக்கும் விளங்குமாறுடு( யார் பாமரர்- எதனால் பாமரர்?) அமைய வேண்டும் எனப் பலர் கடுந்தொனியில் ஆலோசனை கூறக்கேட்கிறோம். இந்தப் பிடிவாதமான கலை- இலக்கியங்கள் தொடர்பான முன் நிபந்தனையும் நிலைப்பாடும் ரசிக நிலையில் உண்மையா னதும் யதார்த்தமானதும் தானா? அதாவது எல்லாமும் எல்லோருக்கும் என்ற வாசகம் நடை முறையில் சாத்தியமானதும் உண்மையானதுமா? எல்லோருக்கும் விளங்குமாறு எழுதுவது எப்படி?
பால், இனம்,இனத்துவம்,வயது,புவியில் காலநிலைப் பின்புலங்கள்,மத,மொழி வேறுபாடு கள், நம்பிக்கை மனப்பாங்கு வேறுபாடுகள் என்பன சார்ந்து அவரவருக்கென, அவருக்கான பார்வைகளும்- புரிதல்களும், நாட்டங்களும்,தெரிவுகளும் உள்ளன. நிச்சயமாக எல்லாம் எல்லோருக்கும் அல்ல. கவிதைக்கும் எந்தவொரு கலைவடிவத்திற்கும் கூட இதுதான் நியதி. அவரவருக்குரிய உலகங்கள் - அவரவருக்குரிய பாடுபொருட்கள்-கேட்டல்கள், அவரவருக் குரிய யாத்திரைப் பாதைகள், அவரவர் பாதையில் அவரவர் சந்திக்கும் விடயங்கள் என்று தான் யதார்த்தங்கள் உள்ளன. அறிந்தோ,அறியாமலோ- விரும்பியோ, விரும்பாமலோ எல் லாக் கவிதைகளும், கவிஞர்களும் தமக்குரிய இலக்குகளையும்,இலக்கு வாசகர்களையும் கட்டமைத்திருக்கிறார்கள். நாங்கள் எளிமையாக நம்புவது போல் எல்லாமும் எல்லாருக்கு மாக இல்லை. சிலவேளை இந்த இலக்கு ரசிகர்களின் வட்டம் விரிந்திருக்கலாம். சிலவேளை சுருங்கியிருக்கலாம். ஆனால் இலக்குகள் உள்ளன.
ஆகவே எவரொருவரும் எல்லோருக்குமாக எழுதுவதில்லை. யாராவது ஒருவர்தான் தமிழ்கூறு நல்லுலகு முழுமைக்குமாக - அது கடைந்தேறுவதற்காக எல்லோரும் விளங்கிக் கொள்ளுமாறு எழுதுவதாகப் பிரகடனப்படுத்தினாலும் அவ்வாறு யதார்த்தத்தில் நடைபெறுவ தில்லை.
இதனைச் சற்றுப் பாரம்பரிய அறிவியல் துணைகொண்டும் விளங்க முனையலாம். மனி தப் புலன்கள் அடிப்படையிற் வெளிவுலகத்தினை, அகவுலகிற்கு எடுத்துச் செல்லும் வேலையை மட்டுமே செய்கின்றன. இதனைப் புலனுணர்வு என்கிறோம். அகவு லகோ, புலன்கள் வெளியுலகிற் கண்டவற்றை அல்லது மேற்படி புலனுணர்வினை அதனைத் தாங்கிவரும் நரம்புமண்டலத்திடம் இருந்து அவ்வாறே பெற்றுக்கொள்வதில்லை. பதிலாக, மூளையில் ஏற்கனவே பதியப்பட்ட தனிமனிதர்களின் விடய அனுபவத்துடன் கலந்திணைந்தே அது புறவுலகை விளங்கிக் கொள்கிறது. இதனைப் புலக்காட்சி என்பர். இந்தப் புலக்காட்சியினடியாகவே ஒன்றைப் பற்றிய எமது புரிதல்கள் அமைகின் றன.எனவே காணல் - கேட்டல் - வாசித்தல் என்பன எல்லோருக்கும் மஒன்றாகடு இருக்கலாம். ஆனால் புரிதல் ஒன்றல்ல, ஏனெனில் அவை புலக்காட்சிகளால் வேறுபடுத்தப்படுகின்றன. சாதி, வர்க்கம், பால் உட்பட்ட சமூக இருக்கை நிலை சார்ந்த பல்வேறு காரணிகள் இரசிகர்க ளின் வேறுபட்ட அனுபவங்களிற்கு அடிப்படையாகவுள்ளன. ஆகவே யதார்த்தத்தில் ஒவ் வொருவரினதும் புரிதல்களும் வேறுபட்டவை. அதனாற்றான் எல்லாமும் எல்லோருக்கும் புரியும் என்றோ- புரிய வேண்டும் - ஒரேவிதமாகப் புரிந்து கொள்ளப்படும் என்றோ எதிர் பார்க்க முடியாதென்பர். இது ஒரு அடிப்படையான விடயம். இந்தப் பின்னணி காரணமா கத்தான் ஒரு படைப்பானது வாசகனினால் அவனவன் சார்ந்த புலக்காட்சி அனுபவங்களால் மீள் படைக்கப்படுகிறதெனவும் வாசகரின் எண்ணிக்கையினாற் பெருகிச் செல்கிறதெனவும் கூறப்படுகின்றது. நிலவரங்கள் யதார்த்தத்தில் இவ்வாறு இருப்பினும், எதனால் மேற்படி விட யம் மிகவும் பிரச்சினைக்குரியதாக்கப்படுகிறது. இதன் தார்பரியந்தான் என்ன? ஏனெனில் வேறுஞ் சில காரணிகள் இதனோடு சேர்ந்திணைந்துள்ளன.
கவிதையும் இலக்கியத்தின் ஏனைய வடிவங்களும் பேசுமொழி சார்பானவை என்பது தான் இவ்வகைக் குற்றச்சாட்டுக்கள் அதிகமுருவாக இன்னொரு அடிப்படைக்காரணமெனக் கூறமுடியும். கடந்த இதழில் நாம் விவாதித்தது போல இலக்கிய மொழியானது, பொதுமொழிக் குள் ஒரு தனிமொழி என்பதும் - அதன் மொழித் தர்க்கம், எமது அன்றாட மொழித் தர்க்கத்தி லிருந்து வேறுபட்டதென்பதுந்தான் பொதுவாக எம்மாற் தவறவிடப்படுகின்ற ஒன்றாக இலக் கிய வாசிப்பில் காணப்படுகின்றது. எமது அன்றாட மொழித்தர்க்கத்தின் துணைகொண்டு இலக்கியத்தினைத் திறக்க முற்படும் போதுதான் பிரச்சினை உருவாகிறது. ஆதலால், அது பல சமயம் திறக்கப்பட முடியாததாய் - அதனால் புரிந்து கொள்ளக்கடினமானதாகிவிடுவது டன், வேண்டுமென்று பூடகப்படுத்தப்படுவதாகவும் வாசகனாற் பார்க்கப்படுகின்ற நிலையும் ஏற்படுகிறது. இதற்கென்ன வழி? இதிலிருந்து வெளியேற முயற்சிப்பதெவ்வாறு?
முக்கியமானது என்னவெனில், ஒரு மொழியை அறிய அம்மொழியறிவு எவ்விதம் அவசி யமோ, அதே வாதந்தான் இலக்கியத்திற்கும் என்பர். ஏனெனில் எந்த ஒரு கலை வடிவமும் அதற்கேயான ஒரு மொழியமைப்பைக் கொண்டிருக்கிறது. அதனாற்தான் அதுவொரு தொடர் பாடல் முறையுமாகியுள்ளது. ஆதலால், கலை - இலக்கியத்தின் சுபாவங்களையும் அதன் கட்டமைப்பினையும் இயங்கு முறை - மற்றும் பரிமாணங்களை அறியவும் அதனால் அத னைப் புரியவும் கூடிய ஆற்றல் இலக்கிய வாசிப்பிற்கு முக்கியமானது. அதுவே, இலக்கி யங்களைத் திறக்கவும் - அதனுள் நுழைவதற்குமான அடிப்படையாகிறது. எனவே இலக்கிய மொழியுடனான குறைந்த பட்சப் பரீட்சையமாவது இல்லாது விடும்போது அந்த மொழிப் பிராந் தியத்தினுள் நடமாடுவதற்கான சாவி நமக்குக் கிடைப்பதில்லை. இது புரியாமை பற்றிய குற்றச் சாட்டுப் புறப்படும் மிகமிகப் பிரதானமானவொரு புள்ளி ஆகும். எதனால் இந்தச் சாவி எளிதில் அகப்பட மறுக்கிறது? இதன் வேர்கள் எங்குள்ளன?
எமது கல்வித்திட்ட மைய இலக்கியவூட்டல் அதற்கான அடிப்படையற்றது. அது பெருமள விற்கு சொற்களுக்கு அகராதிப் பொருள் கூறுதலை மட்டுமே சிரமேற் கொண்டுள்ளது. அது நமது அன்றாடப் பாவனையிலுள்ள சொற்கள் இலக்கியமாக உருமாறி உருவேறும் தருணங் களைத் தரிசிப்பதில்லை. அதாவது சொற்களின் கடப்புநிலையை ( மிrழிஐஉe) அதற்கான சூழ் நிலைகளை அவை இனங்காண்பதில்லை. இவற்றின் தொடர்ச்சியாகப் பரீட்சை வினாத்தாள்க ளும் குறித்த ஒரு இலக்கியப் பாடம் யாரால் யாருக்கு, எச்சந்தர்ப்பத்திற் கூறப்பட்டது போன்ற வினாக்களைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைகின்றன.
படைத்தல் போலவே, இரசித்தலும் ஒரு ஆக்கச் செயற்பாடும், மனித மனத்தின் யாத்திரை யுந்தான். படைத்தல் போலவே இரசித்தலும் அதற்கான உழைப்பினைக் கோருகிறது. நாமோ அதற்கான சிறிய உழைப்பினையும் தரத் தயாராக இருப்பதில்லை. எமது கல்வியும் - சூழலும் எம்மை அவ்வாறுதான் ஆக்கியுள்ளன. அதனால், எந்த எத்தனிப்பும் இல்லாமல் ஒரு இலக்கி யப் பிரதி புரிய வேண்டுமென நினைக்கிறோம். அதுமட்டுமின்றி இந்த நினைப்பினுள் ஒரு அதிகார அடுக்கு வேறுபாடும் தென்படுகிறது எனலாம்.
மேற்படி வாதத்தை முன்மொழிபவர்கள் பெரும்பாலும் இந்தவகைபட்ட வாதத்தைக் கலை இலக்கியங்கள் மீதாகவே முன்வைக்கிறார்கள். விஞ்ஞான அறிவியற்துறைகள் என நம்பப் படுவன மீது இத்தகைய குற்றச்சாட்டுக்கள் பொதுவாக முன்வைக்கப்படுவது இல்லை. இதற்கு என்ன காரணம், இலக்கியம் சாதாரணமானது. எல்லோருக்கும் வாய்க்கக்கூடியது. உயர் அறிவு அதிகம் சம்பந்தப்படாதது. ஆனால் விஞ்ஞானமோ உயர் அறிவு சம்பந்தப்பட்டது. அத னைப் புரிந்துகொள்ளவொரு ‘கெட்டிக்கார’ மேதாவி மூளை வேண்டும் என்ற ஒரு வகை யான அதிகார அடுக்கு காரணமான ‘நம்பிக்கையும்’ இதற்குக் காரணம் போலத் தென்படுகி றது. இவ்வாறு, கலை இலக்கியம் தொடர்பில் வெளிப்படையாகச் சொல்லப்படாத ஆனால் விஞ்ஞான அறிவியலோடு ஒப்பிட்டு அதனைவிடத் தரங்குறைந்ததாகப் பார்க்கின்ற ஒரு குறை நிலைப் பார்வை தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் நிலைபெற்றிருக்கிறது.
மேற்குலகில் கலை இலக்கியங்கள் தொடர்பாக ‘இன்னொரு விஞ்ஞானம்’ என்ற பொரு ளில் உலிதீ விஉஷ்eஐஉe எனக் கூறப்படுவதுண்டு. அதாவது, கலை இலக்கியங்களும் விஞ்ஞானம் போலவே தர்க்கங்கள் உடையவை. முன்னர் குறிப்பிட்டது போல அதன் தர்க்கங்கள் அகவய மானவை - உணர்ச்சிகளின் கொதிநிலையாற் கட்டப்படுபவை. உணர்ச்சிகளை உணர்ச்சிக ளாற் திறப்பவை என்பதனால் தேர்ந்த ரசிகனும் தேர்ந்த படைப்பாளியும் தமது மனவெளியில் ஒத்தவர்கள் தான். அதாவது படைத்தலும் ரசித்தலும் அடிப்படையில் ஒரு குறித்த மனநிலை எய்தல் சம்பந்தப்பட்டது. அதனால் தான் சமஸ்கிருத அழகியற் பாரம்பரியத்தில் ரசிகனைக் குறித்து சமமான இதயமுடையவன் என்ற பொருளில் சகிர்தயன் எனும் பதத்தை பிரயோகிக்கி றார்கள். இந்த சமமான இதயமுடையமை என்பது படைப்பாளி எதைக் குறித்தானோ அதைக் குறித்தறிதல் அல்ல பதிலாக அவனது குறிப்புரை கிளர்ந்த மன நிலவரத்தை அல்லது அடிப் படையை அடைதலாகும். பதிலாகக் குறிப்பிட்ட மனநிலவரத்தை அனுபவத்தைத் திறந்து வைக்கவே முயற்சிக்கின்றன என்பர்.
தேவைப்படுவதெல்லாம் சலியாத படைப்புக்களை எதிர்கொள்ளும் மனநிலையும் அதற் கான உழைப்புந்தான். தீட்டுந்தோறும் வாள்கள் பளபளப்பாகின்றன. கூர்மையுடைய வாள் எதனையும் கீறி ஊடறுத்துச் செல்லுவது - விண்மீன் போலும் வானகத்திற் சஞ்சரிப்பது. படைப்பினை திறக்கத்தக்க மனமும் அத்தகையதுதான்.
Posted in | 0 comments
பசியோடிருப்பவனின் அழைப்பு
மலைகளைப் பகிர்ந்துண்ண
அழைத்தாய்
ஆயிரமாயிரம் வெள்ளிகளைச் சூடிய வானம்
கடல் அலைகளில் தத்தளித்துக்கொண்டிருந்தது
மீண்டும் மீண்டும் அழைத்தாய்
காற்று மர இலைகளில் ஒளித்துக் கிடந்தது
இரவு பனித்துளியாய்
புல் நுனிகளில் தேங்கி வழிந்தது
முதலில்
மலைகளை உண்ணும் நுட்பங்களைப் போதித்தாய்
பிறகு
மலைகளின் சுவை பற்றிய பாடல்களை
இசைத்துக் காட்டினாய்
மழைப் பொழிவுகளுக்குள்
மலைகள் வளரும் அதிசயங்களை
வசியச் சொற்களில் சொன்னாய்
மலைகள் தீர்ந்துபோகும் ஒருநாள் வருமெனில்
அப்போது
மலைகளைத் தின்று மலைகளாகிய நாம்
நம்மையே பகிர்ந்துண்டு
பசியாறலாம் என்றாய்
Posted in | 0 comments
தமிழ்க் கவிதை இன்று
கடலோடி
தமிழ் மொழியிலுள்ள நவீன இலக்கியப் படைப்புகளின் மொழியாக்கங்கள் வேற்று மொழிகளில் - குறிப்பாக ஆங்கிலத்தில் வர வேண்டியதன் அவசியம், பலராலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது; அத்தகைய முயற்சிகள் ஓர ளவு ஆங்காங்கு நடைபெற்றும் வருகின்றன.
முனைவர் கே.எஸ். சுப்பிரமணியம் தொகுத்து மொழி யாக்கம் செய்துள்ள ‘Tamil poetry today’ என்ற நூலைச் சென்னையிலுள்ள ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்’ வெளியிட்டுள்ளது.
பாரதியார், பாரதிதாசன் முதலிய 98 தமிழகக் கவிஞர்களினதும் எட்டு ஈழத்துக் கவிஞர் களினதும் கவிதைகள் இந்நூலில் உள்ளன. ஆங்கில மொழியாக்கத்திற்குப் பக்கத்தில் மூலத் தமிழ்க் கவிதையும் தரப்பட்டுள்ளது.
மஹாகவியின் மதேரும் திங்களும்டுத முருகையனின் மஇரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு...’, வ.ஐ.ச. ஜெயபாலனின் ‘கடற்புறம்’, எம்.ஏ. நுஃமானின் ‘கவிதை உள் ளம்’ , சு.வில்வரத்தினத்தின் ‘காயம்’ , இளவாலை விஜயேந்திரனின் ‘காணாதுபோன சிறுவர்கள்’, சிவரமணியின் ‘முனைப்பு’, எஸ். உமாஜிப்ரானின் ‘இம்சை’ ஆகியன இடம்பெற்றுள்ள ஈழக் கவிதைகளாகும்.
முனைவர் கே.எஸ். சுப்பிரமணியம் ஏற்கெனவே தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு 11 நாவல் களையும், 5 குறுநாவல்களையும் , 2 கவிதைத் தொகுதிகளையும் மொழியாக்கம் செய்துள் ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Posted in | 0 comments
வெள்ளை மாரனாரின் 'புனிதத்துக்குள் கட்டுறும் அபத்தத்தின் முகம் '
- குறிப்புக்களும் மேலும் சில குறிப்புக்களும்
தரஹரன்
மறுபாதி இதழில் வெளிவந்த மபுனிதத்துக்குள் கட்டுறும் அபத்தத்தின் முகம்டு என்ற கட்டுரை யைக் கண்ட போது மனதில் இனம்புரியாத பல உணர்வுகள் ஏற்பட்டன. மதங்களின் தோலை உரித்து, அவற்றுள் புதைந்து கிடக்கும் புண்களையும் சீழ்களையும் அபத்தங்களையும் வெளிச் சமிடும் முயற்சி இது “என்ற எதிர்பார்ப்பே இதற்குக் காரணமாகும். ஆயினும் கட்டுரையை வாசிக்கும்போதும் வாசித்து முடித்த பின்னரும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது; என்னை ‘அசடு ‘ வழிய வைத்தது. இதற்குப் பின்வருவன காரணங்களாக அமைந்தன.
1. செத்த பாம்பிற்கு உயிர் கொடுக்கும் முயற்சி என்றோ ஆறிய கஞ்சி என்றோ இக்கட்டுரையைக் கூறலாம். சமணர்க்கு சம்பந்தர் ஏற்படுத்திய இடர் பாடுகள், தொல்லைகள் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே பல நூல்கள் வெளிவந்துவிட்டன. பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் (சம்பந்தரும் சமண ரும்) சம்பந்தருக்குச் சார்பாகவும் சி.என்.அண்ணாத் துரை (இரத்த தாகம்) சமணருக்குச் சார்பாகவும் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் ( பெரியபுராணம் ஓர் ஆய்வு), திரு.வி.கல்யாணசுந்தரனார் (பெரிய புராண முன்னுரை - இராமகிருஷ்ணமிஷன் வெளியீடு) ஓரளவு நடுநிலையில் நின்றும் தத்தம் கருத்துக் களை வெளியிட்டுள்ளனர். இன்னும் சில கட்டுரைக ளும் நூல்களும் வெளிவந்துள்ளன. ஆகையால் இக்கட்டுரை எவ்வகையிலும் புதியது ஆகா. இது அரைத்த மாவை அரைக்கும் முயற்சியே.
2. இக்கட்டுரையை வாசிக்கும்போது ஏற்பட்ட இன் னொரு முக்கிய நெருடல் மொழிக் கையாளுகை ஆகும். தான் வாசித்த நூல்களின் வழி பண்டித மொழியையும் நவீன மொழியையும் கலைச்சொற் களையும் கலந்து எழுதியுள்ளமை வாசகனுக்கு இடையூறை விளைவிக்கின்றது. மபுனிதங்களின் கட்ட விழ்ப்புடு தீவிர கல்வியாளனுக்காக எழுதப்பட வேண் டியதில்லை. சாதாரண கல்வியறிவுடையோர்க்கும் மாணவர்க்கும் வேண்டியது. அதனைச் சாதாரண மொழிநடையில் கூறுவதன் மூலமே அவர்களுக்குப் புரிய வைக்க முடியும். மகட்டிறுக்கமான மொழிடுஎன யாரோ இருவர் பாராட்டுவதை விட நிறைந்த வாசகர்கள் புரிந்து கொள்ளும் மொழியாக இருப்பதே இவ்வாறான கட்டவிழ்ப்புகளுக்குத் தேவை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
3. இக்கட்டுரையில் (ஆசிரியர்) மயாழ் முரிப்பதிகம்டு பற்றிக் கூறும்போது, மமதிருநீலகண்டப் பெரும்பாணருடைய சுற்றத்தார் திருஞானசம்பந்தரின் பதிகத்தைச் சிறந்த முறையில் பாணர் யாழிலிட்டு வாசிப்பதைப் புகழ்ந்து கூற அதனைச் சகியாத சம்பந்தர் இசை உலகார் கண்டத்தி லும் கருவியினும் அடங்காவண்ணம் ம மாதர் மடப்பிடிடு எனும் திருப்பதிகத்தைப் பாடினார்டுடு என்று கூறியுள்ளார். ‘சகியாத சம்பந்தர்’ என்பதற்குப் பெரியபுராணத்தில் சான்றில்லை. சுற்றத்தார் மொழிகேட்டுப் பாணரே யாழில் இசைக்க முடியாதபடி பாடலைப்பாடுமாறு சம்பந்தரைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆக இது கட்டுரையாசிரியரின் ஊகமே. அதே வேளை இப்பதிகம் இசை உலகத்தார் கண்டத்திலும் கருவியிலும் அடங்காது என்பதை ஆசிரியர் நம்புவதாகவே மேற்சொன்ன வரிகள் எண்ணச் செய்கின்றன. ஆனால் இப்பாடற்பகுதிகள் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு கர்நாடக சங்கீத பாடத்திட்டத்துள் அடக்கப்பட்டுள்ளன என்பதைக் கட்டுரை ஆசிரியர் தெரிந்து கொள்ள வேண்டும். இப்பதிகம் இசை உலகத்தார் கண்டத்தில் அடங்கும் என்பது தெளிவு. ஆகவே இசை உலகத்தார் கண்டத்தில் அடங்காத பதிகமாக இதனை நம்பும் ஆசிரியர் ஏன் பாணரின் வேண்டுகோளிற்கு இணங்கவே சம்பந்தர் பாடினார் என்பதை திரிவுபடுத்த வேண்டும் என்பது விளங்கவில்லை.
4. “......எனவே முத்தியாகிய வீடு பேறு திருநல்லூர்ப் பெருமணத்தில் சம்பந்தருக்குக் கைகூடியது என்பது கட்டுக்கதையே அன்றில் வேறில்லை. சம்பந்தர் மநாதன் நாமம் நமச்சி வாயவேடு எனக் கூறிச் சோதியில் புகுந்தது என்பது நடைமுறையில் இயல்புடைய கூற்றல்ல”(பக் -12) என்றுள்ளது. இதன் மூலம் மலமாசை நீக்காத சம்பந்தர் சோதியில் புகுந்த தையே அவர் மநடைமுறையில் இயல்புடைய கூற்றல்லடு என்கிறார் என்பது தெளிவு. ஆக , ‘சோதியிற் புகுதல்’, ‘இறை கூற்று ‘ என்பவற்றை அவர் நடைமுறையில் இயல்புடைய கூற்றாகவே கருதுகிறார் போலும். இதே போல (பக்-17) மசமணரைக் கொல்லும்படி சொல்லியும் துணை நின்றும் தூண்டியவருமான சம்பந்தர் ஏழ் நரகிடை வீழ்ந்து துன்புற வேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை ‘ என அங்கலாய்க்கின்றார். இவ்வாறான கூற்றுக்கள், இவ ரின் மதநம்பிக்கையையும் மதச்சார்பையும் பட்டவர்த்தனமாக்குகிறது. இந்து சமயம் இந்து தத்துவம் எனும் சொற்களூடாகத் தன்னை ஒரு நடுநிலையாளனாகக் காட்ட ஆசிரியர் எடுத்த முயற்சியை தோல்வியுறச் செய்வதோடு இந்துத்துவ நம்பிக்கையாளனாக இவரை இனங் காட்டுகின்றது.
5. இவ்வாறு அமையும் மேற்சொன்ன (04) கூற்றுக்களும் கட்டுரையிலமைந்துள்ள சித் தாந்த விளக்கங்களும் ஆசிரியரின் அங்கலாய்ப்புக்களாக அமைந்துள்ளனவே அன்றி கட்டு ரையின் நோக்கத்தினை சீர்மைப்படுத்த உதவுவதாக இல்லை. பிறிதொரு வகையில் ஆசிரியர் தன் பன்முகத்தன்மையை இனங்காட்ட எடுத்த முயற்சியாகவே உள்ளது. இதன் விளைவாக இக்கட்டுரை தன் நோக்கத்தின் நின்று விலகி சைவ விளக்கக்கட்டுரையாக அமைந்துள்ளது. அந்த வகையில் ‘ கவிதை ‘ பற்றிய மறுபாதி இதழில் இக்கட்டுரை தேவையா என்ற கேள்வி மேற்கிளம்புகின்றது.
6. ‘தருக்கவாதத்தினாலும் மந்திர தந்திரத்தினாலும் ஏலவே சமண பெளத்தரை விரட்டிய சம்பந்தர்’ (பக் - 16) எனும் ஒரு தொடர் கட்டுரையில் உள்ளது. மவிரட்டிய சம்பந்தர்டு என்பது இறந்த காலம் காட்டும் பெயரெச்சம்; மஏலவேடு என்பதும் இறந்தகாலக் குறிப்புச் சொல். இவ் வாறு நடந்திருப்பின் ஏன் பின்பும் அனல் புனல் வாதங்க ளைச் சம்பந்தர் நிகழ்த்தியிருக்க வேண்டும்? ஆகவே இது ‘ஏலவே ‘ சமண பெளத்தரை விரட்ட முற்பட்ட என்று வருதலே சாலப் பொருத்தமானது.
இவ்வாறு விரட்ட முடிந்திருப்பின் பின்பு ஏன் சமணபெளத் தர்களைச் சம்பந்தர் முதலானோர் ‘வதம்’ புரிந்திருக்க வேண்டும்? சமணர்களோடு பல்வேறு சந்தர்ப்பங்களில் வாதங்கள் பல நிகழ்த்தி அவர்களை நாயன்மார்கள் தோற் கடித்த வரலாற்றை நாம் பெரிய புராணம் எங்கும் காணமுடி கிறது. ஆனால் பெளத்தர்களுடன் நடத்திய வாதங்கள் குறைவு. அதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பெளத்தர்களோடு நடந்த வாதங்களில் வெல்லமுடியாத கார ணத்தினால் அவர்களோடு வாதம் நடத்துவதை தவிர்த்தார் கள்; கொன்றார்கள்; ஊனப்படுத்தினார்கள். உதாரணமாகச் சம்பந்தர் பெளத்த துறவி மீது இடிவிழச் செய்து கொலை செய் தமையையும் மாணிக்கவாசகர் தன்னோடு வாதம் புரிந்த பெளத்த துறவிகளை ஊமையாக்கியமையையும் குறிப்பிட லாம். பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் மஎல்லையில்லாமல் அறிவின் அடிப்படையில் வாதம் செய்வதையே தொழிலாகக் கொண்டனர் பெளத்தர்கள். அவர்களுடைய தருக்கமும் அறிவு வாதமும் மிக நுண்மையானவை....... இதனாலேயே ஆதி சங்கர பகவத்பாதர் மிக நுணுக் கமான அறிவுவாத முறைகளைக் கையாண்டு பெளத்தர்களை எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது என நினைப்பதில் தவறில்லைடு (பெரியபுராணம் ஓர் ஆய்வு -பக்-120-127) என் கிறார். ஆக இந்துக்களின் தத்துவ வளர்ச்சிக்கு ஒரு வகையில் அடிப்படையாக, உந்து சக்தி யாக இருந்தது பெளத்தம் என்பது தெளிவு. ஆக மஇக்கட்டுரை ஆசிரியர் கூறுவதுபோலடு தருக்க வாதத்தால் சம்பந்தர் மட்டுமல்ல வேறு நாயன்மார்களாலும் பெளத்தர்களை விரட்ட முடியவில்லை.
7. கட்டுரையின் இறுதிப்பந்தியில் ஆசிரியர், பின் நவீனத்துவம் சார்ந்த கருத்துக்களான ‘’மறுவாசிப்பு, எதிர்மறைக்கூறுகளைத் தேடல், ஒழுங்கமைப்புக்களைச் சிதைத்தல் போன்றவற்றைக் கூறி’’ அதன்வழி நவீன ஆய்வுகளைச் செய்தல் மூலம் தமிழ் இலக்கியம் உரம் பெற்று வளரும் என்கிறார். இக்கூற்றின் வழி அறம், மதச்சார்புநிலை, புனிதத்துவம் போன்றன முதன்மை பெறமுடியாது. ஆனால் இவ்விரு கருத்து நிலைகளும் சமாந்தரக் கோடுகளாகக் கட்டுரையயங்கும் விரவிக்கிடக்கின்றன. இது ஆசிரியரின் அக முரண்பாட்டையே எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வாறான அரைத்த மாவை அரைக்கும் முயற்சியை விடுத்து சம்பந்தர் சார்ந்த தனித்து வமான ஆய்வுகளை மேற்கொள்வதே மேலானது. சம்பந்தரையும் பெளத்தத்தையும் பற்றிப் ‘போடுபோக்கான’ கட்டுரைகளே வெளிவந்துள்ளன. தனித்துவமான ஆய்வுகள் வெளிவர வில்லை. அதனை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கலாம். இதற்கான இரு குறிப்புக்களை மட்டும் இக்கட்டுரை ஆசிரியருக்குச் சமர்ப்பிக்றேன்.
1. பெளத்த தர்க்கவாதிகள் பலர் தமிழர்களாக இருந் தும் அவர்களின் அறிவு நிலைப்பட்ட வாதத்தன்மை யால் மக்கட் செல்வாக்கை அவர்களால் பெரிதும் பெற முடியவில்லை. ‘அறிவுடைய பெருமக்களையே’ அவர் களால் கவரமுடிந்தது. முன்னர் குறிப்பிட்ட அ.ச.ஞான சம்பந்தனின் கூற்று இதற்குத் தக்க சான்றாகும். இதனாற்றான் போலும் சமயகுரவர்கள் சமணர்களோடு இணைத்தே பெளத்தர்களைத் தாக்கினார்களே அன்றி பெரிதும் தனித்துச் சுட்டவில்லை; வாதங்களை அதிகம் நிகழ்த்தவும் இல்லை. தமது மேலாண்மைத்தனத்தால் பெளத்தர்களை அடக்கினார்களே அன்றி வாதில் பெரு வெற்றியீட்டவில்லை என்றே கூறலாம்.
2. சம்பந்தரின் திருமுறைப்பாடல் வைப்பில் மூன்றாம் திருமுறையில் உள்ள மகாட்டுமாவதுரித்துரிடு எனத் தொடங்கும் திருவாலவாய்ப் பதிகத்தில் இடம் பெறும் பாடலே,
‘ மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத்திரு ஆலவா யயருள்
பெண்ணகத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே ‘ என்பதாகும்.
இதற்கு உரையாசிரியர்கள் மமஎங்குமுள்ளவனாக உள்ள ஆலவாயானே பெளத்தப் பெண் துறவியரிடமும் கொடிய சமணர்களிடமும் உள்ள கல்வியைப் பழிக்க, இல்லாதொழிக்க எனக்கு அருள்புரிவாய்டுடு என உரை செய்துள்ளனர். இவ்வுரை தவறானதாகவே எமக்குப்படுகி றது. இறுதி இருவரிகளுமே முக்கியமானவை. பெண்ணகம்- பெண்துறவியர் ; எழில் - அழகு; சாக்கியர் - பெளத்தர்; பேயமண் - சமணர்; மமபெண்ணகத்து எழிற் சாக்கியப் பேயமண் எனும் தொடர் அழகிய பெளத்த சமணப் பெண் துறவியர்டுடு என்றாகிறது. தெண்ணர் - அறிவிலிகள் (கழகத்தமிழகராதி) (உரையாசிரியர் சிலர் மகொடியோர்டு எனப் பொருள் கொள்கின்றனர்) என் றாகிறது. அதாவது அழகிய பெளத்தப் பெண் துறவியர், சமணர்கள் எனும் அறிவிலிகளின் கல்வியைப் பழித்தல் என வரும். அறிவிலிகளின் அறிவை ஏன் பழிக்க வேண்டும்? அறிவிலிகளுக்கு அறிவை அளிக்க வேண்டுமே தவிர பழித்தல், இல்லாதொழித்தல் என்பன செய்தல் நாயனார்க்கு அடுக்கும் செயலாகுமோ? அதிலும் திடீர் என்று பெண் துறவிகளைச் சம்பந்தர் தன் பாடலில் இட்டது ஏன்? ஆண் துறவிகளின் கல்வியை பழிக்காது விட்டது ஏன்? எனும் வினாக்களெல்லாம் மேற்கிளம்பி நிற்கின்றன. ஆகவே கற்பழித்தல் என்பதை உரையாசிரியர் கள் கூறுவது போல் கல்-பழித்தலாகக் கொள்ள முடியாது. மகற்பழித்தலாகவேடு கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்ளப்படின் இந்துத்துவத்தின் புனிதப் படிமமான சம்பந்தர், அழகிய, பெளத்த சமணப் பெண்துறவிகளைக் ‘’கற்பழிக்க இறைவனிடம் வரம் கேட்டார்’’ என்றாகின்றது. இக்குறிப்பு இந்துத்துவப் புனிதர்களுக்கும் வழிபடுநர்களுக்கும் சமர்ப்பணம்.
இங்கு இடம்பெற்ற எல்லாக் குறிப்புக்களின் நோக்கமும் யாருடைய மனதையும் நோகடிப்ப தற்கு அல்ல. ஆரோக்கியமான ஆய்வுகள் வெளிவர வேண்டும் என்ற வேணவாவே.
Posted in | 0 comments
பெண்ணியாவின்“இது நதியின் நாள்“
மருதம் கேதீஸ்
தொண்ணூறுகளின் நடுப்பகுதியிலிருந்து எழுதிவரும் பெண்ணியா, இதுவரை “என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை“ மற்றும் “இது நதியின் நாள்“ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புக்களை வெளி யிட்டிருக்கிறார்.
‘இது நதியின் நாள்’ கவிதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டு, மார்கழி மாதம் வெளி வந்திருக்கிறது. இத்தொகுப்பில் காணப்படும் அதிகமான கவிதைகள் 2007-2008 ஆம் ஆண்டு காலப் பகுதியில் எழுதப்பட்டுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரை இந்தக் காலப் பகுதி யுத்தத்தின் கோரப் பிடிக்குள் சிக் குண்டிருந்தமையால் இங்கு வாழ்ந்த எல்லா இன மக்களும் ஏதோ ஒரு வகையில் அதன் பாதிப்புக்குட்பட்டேயிருந்தனர். ஆதலால் இக் காலப் பகுதியில் எழுந்த அதிகமான படைப் புக்களில் அதைப் பற்றிய பதிவுகள் உள் ளதை அவதானிக்க முடிகிறது. இதற்கு மாறாகப் பெண்ணியாவின் கவிதைகள் இதி னின்றும் விடுபட்டுத் தனி மனித நெகிழ்வு கள், உடைவுகள், வலிகள், இயலாமை பற் றியே தன்னை அதிகமும் வெளிப்படுத்துகின் றன. தவிரவும் பெரும்பாலான கவிதைகள் பெண் மொழி பேசுபவையாகத் தம்மை இனங்காட்டுகின்றன.
‘கயல்விழி விரிந்த தோள்’ எனும் கவி தையில் ‘படுக்கை விரிப்பைச் சரிசெய்வதையும்/புதிய சமையலைக் கண்டுபிடிப்பதையும் விட / இந்த உலகம் விரிவதே இல்லை’ என்று மிகவும் எளிமையான புழங்கும் வார்த்தைகளால் தன்னைச் சுற்றியுள்ள சமூ கத்தின் மீது உள்ள வெறுப்பையும் சினத்தை யும் வெளிப்படுத்தி நிற்கின்றார். மநிகழ்தல்டு, ‘அரசியாகும் ஓர் கழுகு’, ‘பூக்கள்’ எனத் தொடரும் இவருடைய ஒரு சில கவிதைகளை வாசித்துணர்கையில் பெண்களின் நெருக்கடியான பொழுதுகளைப் பேசுவ தோடு ஆண் உறவுகள் மீதான கேள்விக ளோடும் அவையுள்ளன.
பெண்ணியாவின் பெரும்பாலான கவி தைகள் ஒற்றைப் பரிமாணத் தன்மையுடன் தமது அகலிப்பை நிறுத்திக் கொள்கின்றன. மவெளிப்படுத்தல்டு எனும் கவிதையில்
‘இரவினில் நீ
இரைந்து கத்துகிறாய்
பகல்களையும்
விட்டுவிடாமல்
உன்
அவதூறு கொண்டு
அலங்கரிக்கத் தொடங்குகிறாய்...’
என்று கவிதையின் ஆரம்பத்திலேயே பேச்சு மொழிச் சாயல் பூசப்பட்டு அது தன்னை நெகிழ்த்திக் கொள்வதால் கவிதை பலமின்றிப்போய்விடுகிறது. இறுதியில்
‘இதற்கெல்லாம் பதிலாய்
அவள் தன்னை
ஆழ்ந்த மெளனத்தில்
வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறாள்’
எனக் கவிதையின் முடிவில் பெண் ணியா தனக்கான அவதானிப்பை வெற்றி கரமாகத் தக்கவைத்துக் கொள்கிறார். இது போன்றே மகாதல், நீலமான இரவுடு எனும் கவிதையிலும் பெண்ணியாவின் ஆளுமை சுயம் பேசுதல் எனும் வகை பாகத்தினூடாக வெளிப்படுகிறது.
‘ஆண்மை வழியும் இரவில்
இராப்பிச்சைக்காரனின்
கெஞ்சலும் தோற்றமும் மிகைப்பட
கையேந்துகிறாய் ஒரு இரவுக்காக...’
என்று தன்னுடைய பிறிதொரு கவிதை யில் அந்தரங்கங்களையும் கூட விட்டுவைக் காமல் பேசியிருக்கிறார். அனார், பகிமாஜ ஹான், சலனி போன்ற ஏனைய கவிஞர்க ளோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் பெண்ணியா வின் கவிதைகள் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான, தீவிரமான குரலாக வெளிப்படுகி றது எனலாம்.
‘இரவுநேரத் தொழிலாளி தன் பங்கிற்கு / இரவினில் எழுகிறான் / மரங்களை வெட்டுகி றான்/ அவர்களுக்கான உணவினையும் / கூலியின்றிச் சமைக்கிறான்...’ இவ்வாறு தொடர்ந்து செல்லும் வரிவார்த்தைகள் இறுதி யில் மதனக்காக ஒருநிமிடம் தானும் / ஒதுக்க முடியாத தொழிலாளி / எதற்காய் தொழில் புரிகிறான்...?’ எனத் தன்னை எதிர்ப்பால் நிலையில் உருவகித்து எதுவுமற்றுப் போகின்ற வாழ்க்கையினை உணரவைக்கி றார். பெண்ணியாவிற்கு இந்தக் கவிதை தனக்கான ஓர் ஆறுதல் நிலையைத்தர லாம். உலகில் எத்தனையோ தாய்மார்கள் இரவு நேரத் தொழிலாளிகளாகவே வாழ்ந்து வாழ்வை நிறைவும் செய்திருக்கிறார்கள் என் பது உண்மையே.
‘என் குழந்தை ஓவியம்’ என்னும் பெண் ணியாவின் கவிதை அவருக்குக் கைவரப் பட்ட ஓர் கவிதையாக வெளிப்படுகிறது. உண் மையில் கவிதை, எழுதுவதற்கான ஓர் படைப் புக்கலையல்ல; அது அனுபவங்களால் தன் னைக் கட்டிக்கொள்கிறது அல்லது செய்யப் படுகிறது என்றேதான் கூறவேண்டும். ஏனெ னில் கவிதையுணர்வு எல்லோருக்கும் வாய்த்துவிடும் ஒன்றல்ல. அது பல தடவை கள் கவிஞர்களையே ஏமாற்றியும்விடுகிறது. ( மேற்படி கவிதையில் குழந்தை பற்றிய செய லுணர்வுகளை நம்மில் தொற்றவைத்தா லும்)
‘தனித்த இடைவெளியில்
அவன் வரைந்த சுவர் ஓவியங்களின்
உருவங்கள் இறங்கிவந்து
அவனை ஒத்த பாவனைகள் செய்து
தங்கள் தங்களின் இடங்களில் உறைகின்றன.
என் வீடு முழுக்க
ஒரு குழந்தையால் நிரப்பப்பட்டிருக்கிறது.’
எனும் இந்த வரிகளில் கவிதையில் மமெளனம்டு என்று சொல்லப்படுகின்ற உச்ச நிலை வெளிப்படுகிறது.
இதுபோன்ற பெண்ணியாவின் அனேக மான கவிதைகளில் குறிப்பிட்ட வரிகள் கவி தையின் நுண்ணுணர்வை வெளிப்படுத்து கின்றன எனலாம்.
பெண்ணியாவைப் பற்றிச் சலனி குறிப் பிடும்போது மஇந்தச் சமூகம் பெண்ணுக் கென வழங்கியிருக்கும் வாழ்வை நன்கறி வேன். இதற்குப் பெண்ணியாவும் நானும் எனது நண்பிகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல. எனவே இந்த வாழ்வு, சமூகப்போக்கு மீது பெண்ணியா ஆற்றும் எதிர்வினை என் னுடையதும்தான்டு எனக் குறிப்பிடுகிறார்.
ஒரு சமூகத்தின் மீது எதிர்வினையாற்று தல் என்பது அதனுடைய பல பாகங்களையும் பல பரிமாணத்தன்மையில் நோக்குத லையே கொண்டிருத்தல் வேண்டும். தவிர எதிர்வினையாற்றலால் நாம் சாதித்துக் கொள்பவை யதார்த்தத்தில் பெரும் வெற்றி டமாகவே இருந்தும் விடுகிறது. இது கூர்ந்து நோக்கப்படவும் வேண்டிது. ஆண் ஒடுக்குற வுக்கு எதிராக அல்லது ஆண்வெறுப்புணர் வைப் பேசும் பெண்மொழிகள் பெரும் துக் கத்துக்குரியதாகவே இருந்து விடுகின்றது. ஏனெனில் குறித்த கவிஞர்கள் / படைப்புணர் கள் இதற்குப் பின் வாழ்வை எதிர்கொள்தல் என்பது பெரும் போராட்டங்களூடே அமைந்தும் விடுகின்றது. பெண்ணியா தனது எல்லாக் கவிதைகளுக்கும் அப்பால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதற்கு அப்பாலும் அவர் செல்லவேண்டிய பாதை இருந்து கொண்டேயிருக்கிறது.
Posted in | 0 comments
விழுங்கும் தருணங்கள் - கலைமகள் கவிதைகள்

தீபச்செல்வன்
முடிவற்ற உரையாடலையும் தன்னை விழுங்கும் தருணங்களையும் முரண்பாடுக ளையும் ஏமாற்றங்களையும் கலைமகளின் கவிதைகள் பிரதிபலிக்கின்றன. தனக்கான உலகத்தை, தனக்கான சொற்களை, பொழு துகளை இன்னும் பிறவற்றைக் கோரிநிற்கின் றன கலைமகளின் கவிதைகள்.
தனது நினைவுகள் அனுபவங்களைக் கவிதைகளாக வெளிப்படுத்தும் கலைமகள் தனது காத்திருப்பையும் காதலின் நெருக்கத் தையும் மிக உன்னதமாகக் கருதுகிறார். எந்த முரண்பாடுகளிலும் பிரிவுகளிலும் காதல் அல்லது நெருக்கம் குடியிருப்பதை வெளிப்படுத்துகிறார். அது எப்படி சுருங்குகி றது எனவும் பெருகுகிறது எனவும் பேசுகி றார். அன்புக்காக அழைக்கிற மனமும் சொற் களும் அவரை முழுமையாக இங்கு பிரக டனம் செய்து விடுகிறது.
‘உனக்கும் எனக்கும்
ஒத்துவராத சில
பக்கங்கள் நடுவே இன்னும்
அமர்ந்திருக்கிறது நம் காதல்’
என்ற இந்தக் கவிதையின் கூறுதல் முறை மையையும் அதன் அர்த்தத்தையும் நோக்கு கின்றபோது, அது பல கவிஞர்களின் கவிதை களை நினைவுபடுத்துவதாகத் தன்னை வெளிப்படுத்துகிறது எனலாம். ஆனால் தன்னை உன்னதமாக்குகிற
‘பாரதியின்
கவிதையை விட
கண்ணம்மாவின்
கண்ணீர் ஆழமானது’
என்பதன் வாயிலாக பெண்ணினது இயக்க சக்தியையும் ஆளுமையையும் அன்பையும் எடுத்துக் காட்டி உன்னதப்படுத்துகிறார். வாழ்வை மிக உன்னதப்படுத்துகிற மனதை கலைமகளின் காதல் சார்ந்த கவிதைகளில் காணமுடிகிறது. தன்னை விழுங்குகிற தரு ணங்களாகக் கருதினாலும் தொடருவதற்கு தேடி அடைவதற்கு பிரயாசப்படுகிறது.
‘தொடரும் ......
என்னும் வார்த்தையை உன்
ஒவ்வொரு வரிகளிலும்
தேடித்தோற்றேன்’
இந்தத் தோல்வியும் ஏமாற்றமுமே பின்னர் வரும் கவிதைகளையயல்லாம் தூண்டி விடு கின்றன. அதுவே வாழ்வாகவும் தொடருகின் றது.
‘உன்னை நான்
நேசித்த பொழுதுகளை
அறியமாட்டாய்
வெறுத்த பொழுதுகளையே
நீ அறிவாய்’
என்று இப்படிச் சொல்லுகிற கவிதையைத் தொடர்ந்து வருகிற மற்றைய கவிதையில்
‘.....உடல் ரீதியாய்
உணர்வு ரீதியாய்
நான் வித்தியாசமானவள்
உன்னில் இருந்தும்
அவர்களில் இருந்தும்’ என்று இருக்கிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள முக்கியமான கவிதைகளாக மமநான்டுடு என்றமைந்த தன் னைக் குறித்து எழுதும் பிரகடனங்களை அல்லது மனவெளிச் சொற்களைக் குறிப்பிட லாம். கலைமகளும் அவற்றை இங்கு முக்கி யப்படுத்துகிறார். உன் முன் மண்டியிட விரும் பவில்லை என்னும் பொருள் சார்ந்தமைகிற வரிகள் ஏற்கனவே பல கவிஞர்களின் கவி தைகளில் பார்த்திருக்கிறோம். மநான்டு என்ற தலைப்பிலமைந்த கவிதை தன்னைக் குறித்த பாடலாக இருக்கின்றது. அவை கன வுகள் ஏமாற்றங்கள் முயற்சிகள் குறித்துப் பேசுகின்றன.
இந்த முயற்சிகள், ஒரு கட்டத்தில் குருதி சிந்துகிற தருணங்களுக்குக் கொண்டு செல் லுகிறது. மகுருதி சொட்டும் கண்ணீர்டு, மமுடி வில்லாத பேச்சுக்கள்டு முதலிய கவிதைகள் இவ்விதம் அமைகின்றன. மமுடிவில்லாத பேச்சுக்கள்டு என்ற கவிதை முழுத் துயர்க ளின் வலியாக வருகிறது.
‘உங்கள் முன்
மேடையேறும் எங்கள் கால்கள்
வெந்துபோகிறது ஆனால்
எல்லாவற்றையும்
பேசித்தீர்த்துக் கொள்வதற்காய்
மீண்டும் மீண்டும்
மேடை யேறுகின்றது’
இந்த முரண்பாடுகளுக்குள் பிறந்துவிடு கிற குழந்தை குறித்த தாய்மையின் ஏக்கங்க ளாக சில கவிதைகள் வருகின்றன. இந்தக் குழந்தை துயர்கொள்ளுகிறது, அழுகிறது, திசையற்றுக் கிடக்கிறது, யாருக்கு உரியது என்ற கேள்விகளால் தனித்திருக்கிறது. இவ் வாறு தனித்திருக்கும் குழந்தைக்கான தாய் மையின் ஏக்கத்தை கலைமகளின் இந்த வரி கள் உணர்த்துகின்றன.
‘....அவன் விந்துவில் தான்- நீ
பிறந்ததாய் கூற
விட்டு வந்தேன்
பால் சுரக்கையில்
புரிகிறது’
‘வாழ்தல்’ என்ற கவிதைதான் இந்தத் தொகு தியில் என்னை அதிகம் பாதித்த கவிதை. பயங்கரமான உலகத்தில் பிறந்து விடுகிற பெண் குழந்தையின் ஏக்கத்தை ‘வாழ்தல் – 01’ கவிதை பேசுகிறது.
‘இரு முலைகளுடன் பிறந்து விட்டாய்......
நான்
எப்படிச் சொல்வேன்
இந்த உலகம் பயங்கரமானது என்பதை
முன்னம் ஒரு பொழுது
என் தாய் காத்தது போல்
பின்னைய பொழுதுகளில்’
இந்தப் பயங்கர உலகத்தில் தனது குழந் தையை எப்படிக் காத்துக்கொள்ளுவது என்ற ஏக்கமே இந்தக் கவிதை.
………………………………………………….
‘பருந்துகள் வட்டமிடும்
காலங்கள் இவை
அடைகாத்து
சோர்ந்து போய் அமர்ந்திருக்கும்
நான் எப்படிச் செல்வேன்
இந்த உலகம் பயங்கரமானது என்பதை’
குழந்தையின் முழு இருப்பையும் கவிதை மனம் கேள்விக்குள்ளாக்கிறது. ‘வாழ்தல் – 02’ கவிதை உயிரழிவைப் பற்றியும் அச்சமும் அவலமும் நிறைந்த காலம் பற்றியும் பேசுகிறது. அதிகாரத்தால் பலி கொள்ளப்படு கிற வாழ்வு குறித்தும் பேசுகிறது. ஆயுத வழிப் போரின் அவலத்தைக் கவிதை இப்படி சொல்லுகிறது.
‘வன்முறை வளர ஆயுதம் வளரும்
ஆயுதம் வளர போர் வளரும்
போர் வளர கோன் வளர்வான்
கோன் வளர குடி வீழும்டு
உலகப் பொதுவான இன்றைய வாழ்வியல் அரசியலைக் குறிப்பிட்ட வரிகள் உள்ளடக்கி யிருக்கின்றன. மவாழ்தல் - 03, 04’ கவிதை கள் நான் வாழ்வேன் என்ற நம்பிக்கையைத் தருகின்றன.
‘நான் வாழ்வேன்
கனவுகளிலும் கசக்கி எறிந்த காகிதங்களிலும்
உதிர்ந்து கிடக்கும் மலர்களிலும்
இலையுதிர்கால வேனில் பொழுதுகளிலும்’
‘முடிவில்லாப் பேச்சுக்கள்’ என்ற இத்தொகுப் பின் வாயிலாக தனது கனவுகளையும் எண் ணங்களையும் ஏக்கங்களையும் பகிரத் தொடங்கியிருக்கும் கலைமகளிடமிருந்து இன்னும் பல சிறந்த கவிதைகள் கிடைக்கு மென நம்பிக்கை கொள்ளலாம்.
Posted in | 0 comments
அச்சம்
எனது இரவுகளில்
செட்டை கழற்றிய சாரையயான்று
சிநேகம் கொள்கிறது
அலகுகளால் கன்னங்களைத் தேய்ப்பது
நாக்கினால் வியர்வையை ஒற்றுவது
வாலைச் சுருட்டி
வளையமாய் கழுத்தில் எறிந்து
மடியை முகருவது
இரவுகள்
அச்சத்தைத் தருகின்றன
நாகங்களுடன் ஸ்பரிசம் கொள்வதாயும்
பற்களில் விசங்கள் இருப்பதாயும்
சாரைகள் தீண்டி
மனிதர்கள் செத்ததாய் எவரும் சொல்வதில்லை
சாரைகள் புணரும் வேளை
போர்த்தெடுக்கும் வெள்ளைச் சேலையில்
அதிர்ஸ்ட தேவதைகளின் சிரிப்பொலிகள் நிறையும்
மலடிக்கும் கருத்தரிக்கும் என
பாட்டி சொல்வாள்
ஒற்றைப் பாம்பு
என்னுடனேன் சிநேகம் கொள்கிறது...
என்னைப் புணர்வதற்கோ?
Posted in | 0 comments
சத்தியகுமாரன் என்னும் இயற்பெயரைக் கொண்ட மாவை வரோத யன் யாழ்ப்பாணத்தின் வடக்கேயுள்ள மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பில் பரீட்சைத் திணைக்களத்திலும் பின்னர் இலங்கை சுகாதார சேவையில் சுகாதாரப் பரிசோதகராகவும் பணியாற்றி யுள்ளார்.
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், விமர்சனம் என பன்முகத் தளத்தில் செயற்பட்டவர். தேசிய கலை இலக்கியப் பேரவையின் இலக் கியக் குழுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். வானொலி நிகழ்ச்சி களிலும் பங்குபற்றியுள்ளார்.
Posted in | 0 comments

தமிழின் புதுக் கவிதைகளுள் குறிப்பிடத்தக்கவரான சி.மணி மஎழுத்துடு இதழ் வெளிவந்த காலத்தில் புதுக்கவிதை எழுதியவர்களில் ஒருவர். கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் என இலக்கியத்தில் தீவிரமாக இயங்கியுள்ளார். இவர் ஆங்கிலப் பேராசிரியருமாவார். ‘வரும் போகும்’, ‘ஒளிச்சேர்க்கை’, ‘இதுவரை’ ஆகிய கவிதை நூல்களும் மயாப்பும் கவிதையும்டு என்னும் விமர்சன நூலும் வெளிவந்துள்ளன. எலியட்டின் ‘பாழ்நிலத்தை’யும் மொழியாக்கம் செய்துள்ளார்.
விளக்கு, இலக்கியப் பரிசு(2002), தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது (1983,1985) என்பவற்றை யும் பெற்றிருக்கிறார். வே.மாலி என்ற பெயரிலும் எழுதியிருக்கும் சி.மணியின் இயற்பெயர் எஸ். பழனிசாமி.
Posted in | 0 comments
கடிதங்கள்
ஜீவா
புலோலி தென்மேற்கு
கலை உலகில் ஏற்பட்டு வரும் மாறுதல்களின் ஆரோக்கிய மான பகைப் புலத்தில் கவி தைக்கான தனித்துவமான சஞ் சிகைகளின் வருகை முதன்மை பெறுகின்றது. இவ்வகையில் மமநடுகைடுடுயினைத் தொடர்ந்து கலை உலகில் வெளிக்கிளம்பிய மமமறுபாதிடுடுஎனும் கவிதைக்கான இதழின் வருகை மகிழ்ச்சிக் குரியதாக உள்ளது.
வாசிப்புப் பழக்கம் அருகிவிட்டது. அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்று பேச்சளவில் மட்டும் மார்தட்டிக் கொண்டிருப்ப வர்கள் மத்தியில் செயல்நிலை செயற்பாட்டுடன் இயங்குகின்ற கலைஞர்களின் உற்பத்தியாக இவ்விதழின் வெளிப்பாடு அமை கின்றது.
இவ்விதழில் உள்ளடக்கப்பட்டிருந்த கவிதைகள், கட்டுரைகள், ஆரோக்கியமானவையாக அமைகின்றன. எனவே இவ்விதழின் தொடர்ச்சியான வருகை வாசிப்பியல் சார்ந்தும் எழுத்தி யல் சார்ந்தும் மாறுதல்களை ஏற்படுத்தும்.
எஸ்.ரி. அருள்
மல்லாகம்.
அடுத்த மறுபாதிக்காகக் காத்திருக்கிறேன். சமய உணர்வுகளைப் புண்படுத்தாததாயும் காத்திரமானதாயும் அடுத்த இதழ் மலரட்டும். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
தி. மயூரகிரி
நீர்வேலி.
Posted in | 0 comments
சிதறுண்ட காலக் கடிகாரம்
தானா விஷ்ணு
முக்காடு போட்ட வயோதிபன்
உன்னிடம் வருகையில்
உபயோகமற்ற பொருளின் ஞாபகம்
உனக்கு வரக் கூடும்.
உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் போல
மிக அவதானமாக அவனையும்,அவன் ஞாபகங்களையும்
உன்னிடமிருந்து அகற்ற முனைகிறாய்
ஒளி மிகு உலகத்தை
உனக்குப் பரிசளித்த அந்த வயோதிபன்
தெருவோரத்தில் அல்லது ஆலமரத்தின் கீழ்
முடங்கிப்படுக்கையில்
பல வர்ணங்களிலான இந்த உலகம்
மெல்ல மெல்ல உருகிச் சிதைவதனை
நீ காணத் தலைப்படுவாய்
வாழ்வின் அர்த்தங்களை
அர்த்தங்களின் வர்ணங்களை
குழைத்துத் தந்த வயோதிபனின்
காலக் கடிகாரம்
சிதறுண்டு கிடக்கும் மெளன வெளியில்
கொத்தும் அலகுகளைத் தீட்டியபடி
ஒரு மரங்கொத்தி சிறகசைக்க
எப்படி அனுமதிக்க முடிகிறது உன்னால்.
Posted in | 0 comments
About Me
- மறுபாதி
- ஆசிரியர் -சித்தாந்தன், இணையாசிரியர்கள் -சி.ரமேஷ், மருதம் கேதீஸ்
Blog Archive
-
▼
2010
(17)
-
▼
June
(13)
- கடவுளின் நாவிலிருந்து அவர்கள் எழுதிச் சென்றார்கள்
- தொலைவில் ஒரு வீடு
- பசியோடிருப்பவனின் அழைப்பு
- தமிழ்க் கவிதை இன்று
- வெள்ளை மாரனாரின் 'புனிதத்துக்குள் கட்டுறும் அபத்த...
- பெண்ணியாவின்“இது நதியின் நாள்“
- விழுங்கும் தருணங்கள் - கலைமகள் கவிதைகள்
- அச்சம்
- <!--[if gte mso 9]> Normal 0 ...
- தமிழின் புதுக் கவிதைகளுள் குறிப்பிடத்தக்கவரான சி.ம...
- கடிதங்கள்
- சிதறுண்ட காலக் கடிகாரம்
- தலையங்கம்
-
▼
June
(13)